சிவஞான சித்தியார் - Part 14

சிவஞான சித்தியார் 323வது பாடல்

ஈசனுக்கு அன்பு இல்லார் அடியவர்க்கு அன்பு இல்லாதவராக இருப்பர். அவர்களின் நட்பை நீக்கி,சிவனடியாரின் கூட்டத்தை நாடி திருத்தொண்டு செய்து அவர்களோடு மகிழ்ந்து இருப்பாயாக.

சிவஞான சித்தியார் 324வது பாடல்

உயிர் தன்னை அறியும் பொருட்டு,உயிர்க்கு சிவபெருமான் தோற்றத்தை தந்து, திருவெண்ணீறும்,கண்டிகையும்,திருஐந்தெழுத்தும் வழங்கி சிவன் உருவம் போன்றே தோன்றும்படி செய்வார். அத்திருவேடம் தாங்கிவரும் அன்பர் தன் இதயத்தில் அரனைக்கூடும் கொள்கையினால் சிவமேயாய் தோன்றுவர்,அவர்களை தொழுது உங்கள் பாசவினைப்பிடிப்பை போக்கி கொள்ளுங்கள்.
கருத்து:
 திருநாவுக்கரச நாயனாரை தொழுத அப்பூதிஅடிகள் நாயனாராக வீற்றிருப்பதை எண்ணுக. தன் அடியாரை கூடும் அன்பர்க்கு பாசவேர்தனை நீக்கி வீடுபேறு நல்குவார் நம் தந்தை சிவபெருமான்.

சிவஞான சித்தியார் 325 வது பாடல்

திருக்கோயிலில் அமைந்திருக்கும் சிவலிங்கத்திருமேனி தன்னை சிவமாகவே பூரித்து வழிபடுவோர்க்கு இறைவன் லிங்கத்திடையே தோன்றி அருள் செய்வார்.
இறைவனை நினைந்து பாடும் அன்பர்க்கு அவர்கள் பாடும் மந்திரத்தின் வழி அருள் செய்வார்.
எங்கும் நிறைந்த இறைவன் தன்னுள்ளேயும் இருக்கிறான் என்று உணர்ந்து வழிபடும் அருவ வழிபாடு உடையவர்க்கு விறகிடை தீ போல நின்று அருள்வார்.
மெய் அன்பு மீதூரந்த அன்பு நிலையில் மேம்பட்ட அன்பர்க்கு பசு பால் சொரிவது போல இறைவன்,ஞானியர்க்கு முன் தோன்றி அருள் செய்வார்.
இவை நான்கு முறையே சரியை,கிரியை,யோகம்ஞானம் ஆகியவற்றில் அடங்கும்.

சிவஞான சித்தியார் 328வது பாடல்

பரபிரம்மமாகவும்,
பரசிவனாகவும், பரஞானம் இவர் என்றும் ,ஞான குருவை வணங்க,இறைவன் மிக மகிழ்ந்து அந்த ஞானாசிரியனின் வழி தொட்டும்,நினைத்தும்,பார்த்தும் ஆகிய வழிகளில் நம்மை சிறப்பு செய்து சிவனடியை வழங்குவார்.
சிவஞான சித்தியார் தொகுப்பு நிறைவடைந்தது.

சிவஞான சித்தியார் - Part 13

சிவஞான சித்தியார் 305வது பாடல்.

யான் செய்தேன், அவர் செய்தார்,என்னுடையது,யான்,என்ற இக்கோணபுத்தியை ஞானத்தீயால் அழித்து,
திருவருளின் செயலே என்று நின்றிட,இறைவன் அவர்களுக்கு நேரே தன்னை அளித்து முன்நிற்கும்.வினை அவர்களை விட்டு ஓடும்.
நான் செய்தேன் என்று தன்முனைப்பு உள்ளோர்க்கு இறைவன் முன் நில்லாது , போகமும்,கன்மமும் கூடி நிற்கும்.
ஆகவே தன்அறிவாலும்,உலக அறிவாலும் பெறமுடியாத சிவஞானத்தை திருவருள் துணை கொண்டே பெறமுடியும்.
கருத்து:

இருட்டில் தீபத்தை முன்னாள் பிடித்து சென்றால் தீப ஒளி வழிகாட்டும், அதே தீபத்தை நமக்கு (தன்முனைப்புடன்) பின்னே பிடித்தால் இருளில் பாதை தெரியாது விழநேறிடும்.இங்கு தீபமே திருவருளாகும்.
முன்னெறியாகிய முதல்வன் முக்கண்ணன், அந்த நெறியே சரண் ஆகுதல் திண்ணமே._அப்பர் பெருமான்.


சிவஞான சித்தியார் 315 வது பாடல்

நெல் என்றாலே உமி,தவுடு,அரிசி இவை சேர்ந்ததே.நெல் என்பது உடலுடன் கூடிய உயிருக்கு உவமையாகவும்,அரிசி என்பது முக்திக்கு தகுதியான உயிரை குறிப்பது.
தீட்டப்பட்ட அரிசியில் உமியும்,தவிடும் ஒட்டாது விலகும். அதுபோல பக்குவப்பட்ட உயிரில் ஆணவ கன்ம மாயைகள் உயிரிடத்து ஒட்டாது.
நெல் மீண்டும் முளைக்கும், அரிசி முளைக்காது.அதுபோல பக்குவபட்ட உயிர்க்கு மீண்டும் பிறவி ஏற்படாது.


சிவஞான சித்தியார் 316 வது பாடல்

உயிர் மும்மலக்கட்டுள்ள நிலையிலும் உயிருக்கு உயிராய் இறைவன் இருந்து அதனை நுகரும்படி செய்து பக்குவப்படுத்தும் நிலையிலும்,அவ் உயிர் மீண்டும் பிறக்கும் போதும் இறைவன் துணையின்றி தோன்றாது,.
வீடுபேறு வழங்கும் நிலையிலும் இறைவனை அகன்று நிற்கும் நிலை இல்லை.
எனவே இறைவனை பிரிந்து உயிர் என்றும் வாழ்வதில்லை என்பது கருத்து.


சிவஞான சித்தியார் 317 வது பாடல்

இறைவன் எங்கும் நிறைந்தவன் என்றால் எல்லோரும் அவரை காணவேண்டும் என்ற கருத்து ஏற்புடையது அல்ல, எப்படியெனில் கண்களை இருக்க மூடிக்கொண்டால் சூரியனின் ஒளியை காண இயலாது இருளாகவே இருப்பது போலவும்,தாமரை மலரும் பக்குவம் அடைந்த பிறகே சூரியன் அதனை மலரச் செய்வான் அதுபோல பக்குவம் அடைந்த உயிர்க்கு இறைவன் ஞானத்தை வழங்கி சோதிக்கு சோதியாய் ஒளிதருவான்.
கருத்து. இறைவனின் அருள் காற்று வீசிக் கொண்டே இருக்கிறது உனது பாய்மரப் படகின் பாயை உயர்த்திக் கொள் நீ கரை சேர_ஶ்ரீராமகிருஷ்ன பரமஹம்சர்



சிவஞான சித்தியார் 322வது பாடல்

சிவஞானம் பெற்றோர், சிவனடியாரின் வேடம் கண்டால் அவர்களை சிவமாகவே பார்க்கும் இயல்புடையர்,,திருக்கோயிலை ஈசனாகவே போற்றும் இயல்புடையர்.
யாருக்கும் எளிமையானவன் அல்ல என்றும் பெருமிதத்துடன் சிவபெருமானுக்கு அன்பரானோம் என்று இருமாந்து இருப்பர்.
திருப்பணி நில்லாது நடத்துவர்.

சிவஞான சித்தியார் - Part 12

சிவஞான சித்தியார் 271 வது பாடல்

தாதமார்க்கத்தில் ( சிவத்தொண்டு செய்தல்) திருக்கோயிலை தூய்மை செய்ய பெறுக்குதல்,மலர் கொய்தல்,மாலை அமைத்தும்,இறைவனை புகழ்ந்து பாடி, திருவிளக்கு ஏற்றியும். திருநந்தவனம் அமைத்தும், திருநீறை பூசிய அன்பரைக் கண்டால் அவர்களிடம் நான் செய்யும் பணி உளதா என்று கேட்டு பணிந்து இட்ட பணியை செய்து வர,அவர்கள் ஈசன் உலகில் இருப்பார்கள்.

சிவஞான சித்தியார் 275 வது பாடல் 

ஞானநூல்தனை படிப்பதும்,படிக்கும்படி செய்வதும் ,நல் பொருளை கேட்பது, கேட்க்கும்படி செய்வதும்,மெய் பொருளை சிந்தித்தல்,இவை ஐந்தும் எழில் ஞானபூசை. இந்த ஞானம் கொண்டு அர்ச்சிப்பர் இறைவன் அடி சேர்வர்.

சிவஞான சித்தியார் 284வது பாடல்

ஞானநிஷ்டையில் இருப்போருக்கு நன்மையொடு தீமை இல்லை,அவர்கள் விரும்புவது ஒன்றும் இல்லை, அவர்களுக்கு நோன்பு முதலிய நெறிகள் தேவையில்லை, மனத்தால் எண்ணும்படியான பாவனை தேவையில்லை, தவ வேடங்களும் தேவையில்லை, இலக்கு இல்லை, குணம் இல்லை, குலம் இல்லை, அவர்கள் குழந்தை போலவும்,பித்து பிடித்தவன் போலவும்,களித்து,பாடல்,ஆடல் என்று இருப்பர்.

சிவஞான சித்தியார் 285 வது பாடல்

ஞானியர்,நாடு,ஊர்,காலம்,திசை,இருக்கை முதலியவற்றை நம்மை போல் உணரார். மனக்கலக்கம் இன்றி 
உலகியல் பற்றின்றியும்,இன்பத்தில் இன்பமும்,துன்பத்தில் துன்பமும் அடையார்.பற்றும்,வெறுப்புமின்றி ஒருமையுடன் அரனடியை நினைந்தே நிற்பர்.

சிவஞான சித்தியார் 301வது பாடல்

உயிர்த்தூய்மை பெற விளக்கு,நீர்,மலர்,நறும்புகை,திருஅமுது முதலியவை கொண்டு புறபூஜை செய்வது போல சிவபெருமானை அகத்தில் வைத்து இவை பலவும் கொண்டு மனத்தால் பாவித்து வழிபட்டு நினைந்து வந்தால், தூசி படிந்த கண்ணாடியில் மாசு போகும்படி துடைத்த இடத்தில் ஒளிமிகுதல் போல,உயிரிடத்து சிவம் மேலிட்டு விளங்கும். மலமானது அறும்.

சிவஞான சித்தியார் - Part 11

சிவஞான சித்தியார் 217வது பாடல்

உடல், இயக்க பொறிகள் உயிர் அல்ல என்பதை உணர்க.
பொன் அணிகலன் நம்மீது அணிந்த போது எனது என்று வேற்றுமையின்றி இருந்து, அவ் அணிகலன் தன்னிடமிருந்து பிரிந்த பின் அவைகள் தன்னில் வேறாக எண்ணுவோம். 
அதுபோல உடலும்,பொறிகளும் நின்னின் வேறாம் என்பதை உணர்ந்து, உன்னை உயிர் என்று உணர்ந்து உடலை உன்னில் வேறானது என்ற உண்மையை உணர்ந்து பிரித்து பார்

சிவஞான சித்தியார் 222 பாடல்

அரசர் தனது மந்திரி, தளபதி மற்ற படைவீரர்களுடன் சென்று போர் நடத்தி பின்பு தனது அரண்மனை உள் புகும் போது அனைவரும் நீங்கி அரசர் மட்டும் செல்வார்,அதுபோல உடல் மற்றும் கருவிகளோடு கூடி உலகியற் பொருள்களை அனுபவித்த உயிர் முதலில் கண் வழியே சொருகி நனவிலிருந்து விடுபட்டு,கழுத்தில் (கனவு),மார்பு(உறக்கம்),தொப்பில் (பேருறக்கம்) இங்கு தனது இயக்க கருவிகளை விட்டு விட்டு உயிர் மூச்சை காவலாக வைத்து பின் மூலாதாரம் (உயிர்ப்படங்கல்) சென்று இயக்கங்கள் அற்று தன்னிலையில் இருக்கும்.
கருத்து:
இது தினமும் நமக்கு உறக்கத்தில் நடக்கிறது. உறக்கம் வரும்போது கண் சொருது என்று கூறுவதை கவனிக்கவும்.
நாமும் யோகியும் ஒன்றுதான் என்ன ஒரு வித்தியாசம் நாம் உறக்கத்தில் செய்வதை , யோகி நனவிலிருந்தபடியே செய்கிறார்.


சிவஞான சித்தியார் 232 வது பாடல்

இறைவனே எல்லா உயிர்க்கும் அறிவிக்க வல்லான் என்றால் அனைத்து உயிர்க்கு ஒரே அளவு அறிவாற்றல் அமைய வேண்டும். அவ்வாறு இல்லை, மேலும்
அவரவர் அறிவாற்றல் செய்த வினைப் பயனின் வேறுபாடுகளே காரணம் என்றால் இந்நிலையில் இறைவன் தேவையில்லாதாகிறது.
அப்படி அல்ல.

நிலத்தை உழுதல்,எருவிடல்,விதைத்தல்,நீர்பாய்ச்சுதல்,காத்தல் போன்ற செயல்களுக்கு ஏற்ப பலன் பெறுவது போலவும்,
தாமரை மொட்டு வரை வளர்ந்தும் அது மலர்வதற்கு சூரியன் தேவைப்படுவது போலவும்,
உயிர்கட்கு விதிவழியும் முயற்சி வழியும் சீர்த்தூக்கி அருள வல்லவன் வேண்டும் அவர்தான் இறைவன்.

சிவஞான சித்தியார் 246 வது பாடல்

மனம் மற்றும் புலன்கள் வழி கூடி பாவனையால் அறியப்படும் அத்தனையும் அழியும் பொருள் ஆதலால் எந்த பயனும் இல்லை. இவை போலி பாவனையாய் ஆகிவிடும்.
பரம்பொருள் அதனோடு தன்னை ஒன்றித்து நின்று காண்பதே,உண்மை பாவனையாகும்.
கருத்து:
மனம், மௌனம் கடந்தநிலையிலும், வாய்,மொழி பேசாநிலையில்,உடல் இயக்கம் அற்ற நிலையில் திருவருள் வழி நின்று செய்யும் பாவனையே பயன்தரத்தக்கது.
பதி அறிவாலே பதியை அடையமுடியுமே தவிர பாச அறிவால் இறைவனை அறிய முடியாது.
சூரியனைக் காண சூரிய ஒளியே துணை செய்வது போல அவன் அருளே அவனைக் காட்டும்.

சிவஞான சித்தியார் - Part 10

சிவஞான சித்தியார் 190 வது பாடல்.

மூச்சுக்காற்று உயிர் அல்ல.

மூச்சுக்காற்றான பிராணன் உடலை இயக்குகிறது என்றால் இரவில் மூச்சு நடந்து கொண்டிருக்கும் போது உடலில் இயக்கங்கள் நடைபெறுவதில்லை.
மூச்சை இழுத்து விடச் செய்யும் செயல் உயிரிடத்திலிருந்தே நிகழ்கிறது.எனவே
உயிர் வேறு பிராணன் வேறு.


சிவஞான சித்தியார் 192வது பாடல் 

மனம்,புத்தி,அகங்காரம், சித்தம் இவை நான்கும் அகக்கருவிகளே இவை உயிராகாது.
பொருட்களை காண்பதற்கு விளக்கின் ஒளி கருவியாகுதல் போல,இவை நான்கும் உயிர்க்கு கருவிகளே என்பதை தன் இயல்பில் உணர்ந்த உயிர், பசு ஞானம் பெறுகிறது.
அதன்பிறகு அவ் உயிரிடத்தே சிவஞானம் கூடும்.அதுவே பதிஞானம் ஆகும்


சிவஞான சித்தியார் 193

அ உ ம என்ற ஒலி மனம்,புத்தி, அகங்காரத்தையும்,விந்து சித்தத்தையும்நாதம் உள்ளத்தையும் கடலின் அலையில் வெளிப்படும் நுரை புதிதுபுதிதாக தோன்றி ஒடுங்குவது போல இவை ஐந்தும்
உயிரின் அறிவு தோன்றி ஒடுங்க காரணமானவை.
ஐவகை ஒலிவடிவம் முறையே விரி அகரவடிவம்,வகை என்பது உகரவடிவம்,தொகை என்பது மகரவடிவம்,நுட்பம் என்பது விந்து வடிவாகவும்,மிகுநுட்பம் என்பது நாதவடிவாகவும் உயிரில் தோன்றி மறைகிறது.
இதனையே வடமொழியில் முறையே வைகரி,மத்திமை,பைசந்தி,சூக்குமை, அதிசூக்குமை என்று அழைப்பர்.
கருத்து.
உதாரணமாக சேக்கிழார் பாடிய பெரியபுராணம் என்பது விரி,நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் அந்தாதி என்பது வகை, சுந்தரமூர்த்தி நாயனார் பாடியது திருத்தொண்டர் தொகை, இப்பதிகத்தை நமக்கு கிடைப்பதற்கு நுட்பமாக விளங்கியவர் விறல்மிண்டர், இதனை அதிநுட்பமாக இருந்து நடத்தியவர் சிவபெருமான்


சிவஞான சித்தியார் 210வது பாடல்.

உயிர் எதனை சார்ந்து நிற்குமோ அத்தன்மையதாய் நிற்கும். அனாதியிலிருந்து ஆணவத்தில் கூடி இருத்தலால் அருவத்தன்மை இலாது தான் சார்ந்த பொருளாகவே தன்னை நினைக்கும். உயிர் பாசத்தோடு கூடி என்றும் கட்டுண்டு கிடப்பதால் அதற்கு பசு எனப் பெயர் பெற்றது.

சிவஞான சித்தியார் - Part 9

சிவஞான சித்தியார் : 135வது பாடல்
வாசமிகு திரவியங்களைப் பூசி,மலர்மாலை அணிந்து,அறிவில்லா மக்கள் பின் செல்ல, வாத்தியங்கள் இசைக்க,சிவிகையில் தூக்கி செல்லும்போது அதன்உள் செல்வச்செருக்கினால் நிலையாமையை உணராமல் கிடக்கும் மனிதர் பிணத்தோடு ஒப்பாவார்கள்.
கருத்து : பிறந்த இரகசியம் பிறவாதநிலை அடையவே. இதனை உணராதவர்க்கும் கால்நடைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
சிவஞான சித்தியார் : 188வது பாடல்
உடல் வேறு அதனுள் இருக்கும் உயிர் வேறு. உயிர் அற்ற உடலுக்கு உணரும் தன்மை இல்லை.
உறக்கத்தில் உயிர் இருந்தும் உடல் உணர்வற்றநிலையில் இருக்கும்.
அப்போது அவ்உயிர் இளைப்பாறுதல் பெற இறைவன் நனவிலிருந்து கனவு,உறக்கம், பேருறக்கம்,உயிர்ப்படங்கல்.ஆகிய ஐந்து நிலையில் ஒய்வு தருகிறார்.
இதிலிருந்து உயிரையும் உடலையும் இணைத்து உணர்வு ஊட்டுவது இறைவன் என்பது தெளிவு. உயிர்க்கு உயிராய் இருந்து இறைவன் உயிரையும்,உயிரை கொண்டு உடலையும் இயக்குகிறார்.

சிவஞான சித்தியார் - Part 8

சிவஞான சித்தியார்: 180 வது பாடல்
திருமுறையும்,திருமறையும்,சித்தர்களின் ஞான நூல்கள் இருந்து வரும் நாட்டில் நாம் பிறந்தது பெரும் புண்ணியம்.
அப்படி பிறப்பினும் தவம் செய்யும் வீட்டில் பிறத்தல் அரிதாகும். தவக்குடும்பத்தில் பிறந்து புறச்சமயம் சார்ந்து உழலாது சைவசமயம் சார்ந்து நிற்றல் அதனினும் அரிதாகும்.
சிவஞான சித்தியார் : 182 வது பாடல்
மானிடப்பிறவியை பெற்றதன் பயனே யாதெனில் மனம்,வாக்கு,மெய்யை கொண்டு இறைவனை நினைத்து, பாடி,பணிசெய்யவேயாகும்.
விண்ணுலக தேவர்களும் திருமாலும் உய்யும் பொருட்டு அரண்தன்னை அர்ச்சிப்பர். ஊண் எடுத்து உழலும் ஊமர்கள் இதனை உணரார்.
சிவஞான சித்தியார் : 183வது பாடல்
கருவிலிருந்து ஒவ்வொரு பருவத்தை கடக்கும் போது அதற்கு முன் உள்ள நிலை அழிவது கண்கூடாகபார்க்கிறோம்.
முதுமையும் அழிந்து உருவமே அழியும் இதனை உணர்ந்து,காலன் வரும் முன்னே,காலம் உள்ளபோதே இறைவனை விரும்பி உய்யுங்கள்.

சிவஞான சித்தியார் - Part 7

சிவஞான சித்தியார் : 124 வது பாடல்
மருத்துவர் கூறும் முறைப்படி நடவாதவர்களுக்கு நோய் வந்தால் கசப்பானமருந்து கொடுத்து நோயை நீக்குவார் மருத்துவர்.
அதுபோல இறைவன் அருளிய நூல்வழி நடவாதவர்களுக்கு, துன்பத்தை கொடுத்து வினைநீக்கம் செய்வார். சிவஞான சித்தியார் : 125 வது பாடல்
  • மருத்துவர், சில நோய்களுக்கு தேன்குழைத்து கொடுத்து நோயை நீக்குவார்.
  • அதே மருத்துவர்,நோயின் வன்மையை கண்டு அதனை நீக்க அறுவைசிகிச்சை செய்து குணப்படுத்துவர்.
இந்த இரண்டு செயலுக்கு காரணம் அவரவர்க்கு உள்ள நோயின் தன்மையை பொறுத்தே அன்றி மருத்துவர், நோயாளிகள் மீது கொண்ட விருப்பு,வெறுப்பு அல்ல. அதுபோலவே இறைவன், இன்ப,துன்பங்களை வேண்டுவர்,வேண்டாதவர் என்று பாராது நமக்கு வழங்கி வினையை அறுப்பான்.
சிவஞான சித்தியார் : 142 வது பாடல்
மாயையிலிருந்து தோன்றும் உடல்,உலகு இவையாவும் மலங்களே .
அப்படியிருக்க இம்மலங்களைக் கொண்டு,இறைவன், உயிர்க்கு மலக் கன்மங்களை நீக்குதல் என்பது எங்கனம்.
எனில் வண்ணார் துணியை துவைக்கும் முன் உவர் மண்ணில் துணியை ஊரவைத்து (மேல்லும்அழுக்கு செய்து) பின் துவைத்து தூய்மை செய்வது போல இறைவன், உயிர் மலம் நீக்கம் பெறவே உடல்,உலகு கொடுத்து துய்க்க செய்து, உயிரே பிறவியை வெறுக்கும்படியும் செய்கிறார்.
முன் அழுக்கை பின் அழுக்கு எடுத்தபின் பின் அழுக்கும் நீங்குகிறது.

சிவஞான சித்தியார் - Part 6

சிவஞான சித்தியார் : 115வது பாடல்
யாதொரு தெய்வத்தை வழிபட்டாலும் அத் தெய்வத்தின் வடிவின் உள்ளிருந்து அருள்வது சிவபெருமானே,ஏனெனில் எல்லா தெய்வமும் பிறக்கும், இறக்கும்,நல்வினை, தீவினைக்கு உட்படும்.
இவைகளுக்கு உட்படாதவர் சிவபெருமான் ஒருவரே.அவர் உயிர்களின் செயல் திறன்களை வைத்து அவரவர் வழிபடும் வடிவத்தில் இருந்து அருள் செய்கிறார்.
ஈறில்லாதாவன் ஈசன் ஒருவனே,அவர் பிறப்பு இறப்பு இல்லாதவர்,
சிவஞான சித்தியார் : 119வது பாடல்
  • சிவபெருமான் மீது கொண்ட அன்பினால் செய்த பாவமும்,புண்ணியமாகும்.
  • சுவாமி மீது அன்பில்லாது செய்யும் புண்ணியமும் பாவமாகிவிடும்.
சண்டேசநாயனார் தன் தந்தையின் இரண்டு கால்களை நீக்கியும் சிவப்பேறு கிடைத்தது. இறைவனுக்கு அன்பு இன்றி தட்சன் செய்த பெருவேள்வி தீமையில் முடிந்தது.
சிவஞான சித்தியார் : 121 வது பாடல்
அரசன் தன் ஆணைப்படி நடவாதவரை,செம்மைப்படுத்த சிறையில் வைப்பான். தன் ஆணைவழி நடப்பவர்க்கு வீடு,செல்வம் கொடுத்து வாழ வைப்பான்.
அதுபோல இறைவனும் நம்மை திருத்துவதற்க்காகவே தண்டித்தும்,சுவாமி மீது அன்புகொண்டு நற்செயல்கள் செய்வோர்க்கு பெருவாழ்வு வழங்குகிறார்.

சிவஞான சித்தியார் - Part 5

சிவஞான சித்தியார்: 80,81 பாடல்
மூவரின் வடிவமும் சிவம் போன்று போற்றப்படுவது எங்ஙனம் எனில் இறைவனின் ஆற்றல் மூவரில் பதிந்து செயல் செய்வதால் அவர்களின் உருவங்கள் உலகில் இறைவனை போன்று போற்றப்படுகின்றனர்.
அரசனுடைய ஆணை ஒன்றுதான்,அதனை செயல்படுத்த மந்திரி,படைத்தலைவர் போன்ற பலர் தத்தம் பொறுப்பின் வழி செயல்படுவது பல வேறுபாடு தெரிவது போல,இறைவன் ஆணை வழி அத்தனை சக்திகளும் புத்தி,முத்திகளை வழங்குகின்றன.
கருத்து: இந்த உண்மையை அறியாதார்,அரியும்,அரனும் ஒன்று என்று வாது செய்கின்றனர்.
சிவஞான சித்தியார் : 93 வது பாடல்
உடம்பில் உயிர் இருப்பினும், உயிர் வேறு உடல் வேறு என்று உணர்கிறோம். அதுபோல இறைவன் உயிர்க்கு உயிராக இயைந்து இருந்த போதிலும், உயிர் என்றும் இறைவனாகவே ஆவது இல்லை. அவ் இறைவனும் உயிராக ஆவதில்லை. சிவமாம் தன்மை பெறுமேயன்றி சிவமாகவே மாறுதல் அல்ல. சிவஞான சித்தியார் : 94 வது பாடல்
இருவினையும் பிறவிக்கு காரணமாகிறது. அவ் வினையை உயிர்க்கு ஊட்டுவது இறையே. சடப்பொருளான வினை தானாக சேர்வது இல்லை.

சிவஞான சித்தியார் - Part 4

சிவஞான சித்தியார் : 39 வது பாடல்
விளக்கம்:
சுத்த மாயையிலிருந்து நாதமும் அதிலிருந்து விந்துவும் அதிலிருந்து நான்கு வாக்குகள் தோன்றும்.(வைகரி,மத்திமை,பைசந்தி,சூக்குமை இவை பற்றி அடுத்து பார்ப்போம்)
சுத்தமாயை இறைவன் அருள் திருமேனி எடுத்து செயல்படுத்துகிறார். தூயதும்தூயது இல்லாத மாயையை இறைவன் மூவர் கொண்டு செயல்படுத்தியும், தூயது அல்லாத மாயையை சீகண்டரை நியமித்து இயங்கச் செய்வார்.
அசுத்தமாயையில் 24 தத்துவம் தோன்றி உயிரை உடல் எடுக்கச் செய்து தொழில்படுத்தும்.
  • விந்து,நாதம்,சுத்தம் வழியே சென்றே அருள்நிலை கிட்டும்.
சிவஞான சித்தியார் : 63,64 வது பாடல்
இறைவன் அருவமாகவும்,அருஉருவாகவும்,உருவமாகவும் இருந்து உயிர்க்கு உய்வுதருவார். இறைவன் அருவமாக மட்டும் இருக்கிறார் என்ற கூற்று சரியல்ல.
உருவத்தில் காணும் பொருட்கள் அருவநிலைக்கு மாறுவதில்லை,இறைவனும் அருவமாய் மட்டும் இருக்கிறார் என்ற கருத்து,நாம் கானும் உலகப்பொருளின் தன்மையோடு இறைவன் ஒன்றாகிவிடுவான். எனவே இறைவனின் வடிவமான அருவுரும்,உருவத்தையும் ஏற்று வணங்கு. சிவஞான சித்தியார் : பாடல் 71
இறைவன் உரு எடுத்து மகேஸ்வரனாக அருள்வது உயிர்களுக்கு அருள்வதற்காகவே, உருஎடுத்ததால் இறைவனை மனிதருள் ஒருவனாக கருதக்கூடாது.
ஒருவுரு இன்றி பலவுரு கொண்டு வருவதும் அருள்தல் பொருட்டே. உயிர்க்கு உயிராயும்,வேறாய் அப்பாற்பட்டு நின்றுள்ளான் என்பதை அறியவும்.
இறைவன் நமக்கு துன்பம் செய்வதாக உணர்வது அறியாமையே. உயிரின் வினையை கெடுத்து,நன்மையை அருள்வதற்கே என்று உணர்வது அறிவுடமையாகும். நையவைத்து வினையை நீங்கச் செய்வார்.

சிவஞானசித்தியார் - Part 3

சிவஞானசித்தியார் : பாடல் 54
படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கு மூவர் உரியவராக இருக்கிறார் என்று உலகத்தார் கூறும்போது, முத்தொழிலுக்கும் முதல்வன் சிவபெருமான் என்பது எங்ஙனம் பொருந்தும்.
பிரம்மன், திருமால்,உருத்திரன் ஆகிய மூவரும் தாம் பெற்ற பெரும் சிவப் புண்ணியத்தால் அப்பதவி பெற்றனர். மூவரும் சிவபெருமானின் ஆணை வழிநின்று செய்வார்களேயன்றி தன் விருப்பப்படி செய்வார் அல்லர்.
ஆதலால் சிவபெருமானை முத்தொழிலுக்கு முதல்வன் என்கிறோம். சிவஞான சித்தியார் : 56வது பாடல்
சிவபெருமான், உயிர்களுக்கு புத்தி,முக்தி வழங்கவும், அருள்வதன் முன்னே, மும்மலங்களையும் துடைத்து தன் கருணையினால் செய்யும் செயலை விளையாட்டா செய்கிறார்.
திருவிளையாடல் என்பது எளிமையை குறிப்பது. எந்தவித சிரமப்படாமல் மிக எளிதாக செய்யும் செயலைக்குறிப்பது.
சிவஞான சித்தியார் : 57 வது பாடல்
அழிப்பு என்ற தொழில் உயிர்களுக்கு இளைப்பாறுதல் செய்யவும்,உயிர்க்கு உடல் தோற்றம் எடுக்க செய்து வினைக்கழிவு செய்யவும், உடலோடு உயிரை நிலைப்பட செய்வது வினைப்பயனை நுகர்வதற்கேயாகும்.
இம்மூன்று தொழிலோடு இறைவன்,உயிர்க்கு மறைப்பாற்றல் வழி மலங்களை நீக்குதற்க்கும், சிவப்பேற்றை உயிர்க்கு வழங்கி அருளல் ஆகிய ஐந்தொழில்களும் இறைவனின் அருட்செயலேயாகும்.
மறைப்பாற்றலே திருவருள் ஆற்றலாக மாறி அருள்கிறது. மறைப்பாற்றலின் விளக்கத்தை திருக்குறிப்புத்தொண்டர் வரலாற்றின் வழி அறியலாம்.

சிவஞான சித்தியார் - Part 2

சிவஞான சித்தியார் : 6 வது பாடல்
சிவாயநம சிவஞான சித்தியார் 6வது பாடல் சிவஞானத்தை குருநாதர் வழி கேட்டல் அளவைகளை கொண்டு சிந்தித்தல் பெற்ற அறிவை இறையவனோடு ஒன்றிய உணர்வில் இருந்து தெளியலாம். இதன்வழி மலநீக்கம் பெறலாம்.
அளவை மூவகைப்படும்:
  1. ஐயமும்,திரிபும் இன்றி பகுத்துணர்தல்.
  2. நேரே அறியப்படாத ஒன்றை அனுமானத்தால் அறிவது.
  3. மேலே குறிப்பிட்ட இரண்டின் வழி அறியாதநிலையில் சான்றோர்களின் வாக்கின்படி அதன்வழி நின்று அறிவதாகும்.
சிவாயநம சிவஞான சித்தியார்: 21 முதல் 29 வரை
பொருள்:
உலகம் தோன்றி,நிலைபெற்று, அழிதல் இந்த மூன்று செயலுக்கு முதல்வன் ஒருவன் வேண்டும்.
தானே தோன்றிய ஒன்றிற்கு மாற்றமோ அழிவோ இருக்காது. எனவே அனைத்தும் தோன்றி மறைவது இயல்பு அல்ல.
தானே அழிந்த பொருள் மீண்டும் தோன்றுவது இல்லை. இதனை செய்ய தோற்றமும் முடிவும் இல்லாத ஒருவன் வேண்டும். அவரே உயிருக்கு உயிராய் இருந்தும்,அணுவுக்குள் அணுவாய் இருந்தும் இயக்குகிறார்.

சிவஞானசித்தியார் பாடல் விளக்கம் - Part 1

சிவாயநம பதினான்கு மெய்கண்ட சாத்திரநூல்களில் சிவஞானசித்தியார் என்ற நூலை இயற்றியவர் அருள்நந்தி சிவாச்சாரியாராகும்.
இந்நூல் பரபக்கம்,சுபக்கம் இரண்டு பாகங்களை கொண்டுள்ளது.
  • பரபக்கம் பிறருடைய சமய கொள்கைகளை கூறி சிவநெறியின் மேன்மையை விளக்கப்பட்டுள்ளது.
  • சுபக்கம் சிவநெறியின் கொள்கைகளை விளக்கப்பட்டுள்ளது.
சிவஞானபோதம் என்ற மெய்கண்டசாத்திரத்தின் தலைமையான நூலுக்கு விளக்கம் தரும் நூலாகக் கருதப்படுகிறது. முதலில் சுபக்கம் பகுதியின் தொகுப்பை பார்ப்போம். பாடல் 1,2,3,4 ஆகிய பாடல்களின் பொருள்.
கங்கையையும்,பிறைசூடி தாழ்சடையுடைய சிவபெருமானின் திருவடிகளை சேர மூத்த பிள்ளையாரை வணங்கி, சமயங்களுக்கெல்லாம் முதற்பொருளாயும்,அம்மைஅப்பராய் இருந்து,எங்கும் நீக்கமற நிறைந்து விளங்குகின்ற சிவபெருமான் திருவடியை தலைக்கு மேல் வைத்தும், என்னை பிறவிக்கடலில் மூழ்காது,தன்திருவடியை என் தலைமேல் சூட்டி எனது குருநாதரான மெய்கண்டார் அருளிச்செய்த சிவஞானபோதம் என்னும் அரிய பனுவலை மேல் எல்லையாகக் கொண்டு சைவசித்தாந்த உண்மைகளை விளக்குவோம்.
இந்நூல் வழி சிவபெருமான் திருவடிகளை அடையும் முறைகளை வகுத்து கூறுவோம்.

இருபா இருபது- பகுதி 6

இருபாஇருபது 18,19,20 வது பாடல் விளக்கம்.
சுவாமி, நான் உடல் எடுத்தற்கு வருந்தாமல் ,நானே அரசன் என்று என்னை நினைத்து கொண்டு நிலையற்ற உடலையும் உறவையும் உலகம் முதலியவற்றை மகிழ்ச்சி எனக்கருதி உன்னை நாடாது இருக்கும் எனக்கு என்னுள்ளே இருந்து என் குற்றத்தை பொருத்து, மெல்ல மெல்ல உன் சிந்தனையை தந்து பேரின்பத்தை நுகரும்படி செய்து என்னை ஆட்கொண்ட திறம் வியப்புக்குரியது.
இருவினை நீக்கி உன் திருவடிகளை தந்தாய், அனைத்து உலகத்தில் உள்ள உயிர்கட்கெல்லாம் ஒப்பற்ற அறிவாக விளங்குபவரும்,பற்று விட்டவரை பற்றாகி நிற்கும் சிவபெருமானே நீ என்னுள்ளேயே இருப்பதை உணர்ந்து மகிழும் காலம் என்நாளோ.
இருபாஇருபது இருபது பாடல் நிறைவுபெற்றது.

இருபா இருபது- பகுதி 5

கேள்வி 16 : இறைவன் அருளால் வினை நீங்கிய பின்பும் உடலோடு உயிரை இருத்திவைப்பதற்கு காரணம் என்ன?
பதில்: இருபாஇருபது 16 வது பாடல்
முன்வினை(தொல்வினை), வருவினை(ஏறும்வினை) இவ்விரண்டையும் இறைவன் நீக்கி அருள்வான். எடுத்துவந்தவினை (நுகர்வினை) உடலோடு நீங்குவது எனவே நுகர்வினை தீரும் வரை உடலை இருத்திவைப்பார். அத்தகையோரின் உடல் ஞான உடலாகும்.
கேள்வி 17 : இறைவா நீ உயிர்களிடத்து விளங்கி நின்று அருளியும்,தோன்றத் துணையாக இருந்து அருளியும், ஒளிந்திருந்து அருள்வதும் ஏன்? இம்மூன்று வகையில் அருளக் காரணம் என்ன?
பதில்: இருபாஇருபஃது 17வது பாடல்
ஞானியர்க்கும் முன் எழுந்து அருளியும், மலப்பிணிப்புடன் இருந்தும் இறைவனை நினைந்து வாழும் உயிர்க்கு, உள்ளிருந்து தோன்றத்துணையாக இருந்தும் அருள்வார். தான் மலப்பிணிப்புடன் இருப்பதையே அறியாது இறைவனை (விரும்பாதவர்க்கு ) ஓராதார் அவர் உள்ளத்தில் ஒழிக்கும் ஒளியானாக இறைவன் திகழ்வார்.
கண்ணாடியில் ஒளி நுழைந்து போவதையும். பாலில் நெய் உள்ளது போலவும். சுவரில் ஒளி நுழையாத நிலையை இம்மூன்று நிலைக்கு ஒப்பிடவும். இதில் உயிரின் தன்மையே காரணமேயன்றி இறைவனிடம் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை.
நம் தன்மையை மாற்றாது எதுவும் நடக்காது. உயிர்க்கு வினைக்கழிவு செய்யும் வரை இறைவன் உயிர்க்கு உயிராய் இருந்து பக்குவப்படுத்த தோன்றாத்துணையாயும்,ஆணவம் நீக்கம் பெற்ற உயிர்க்கு முன்வந்தருளி பேரின்பத்தை வழங்குகிறார்.
சூரியன் எல்லா இடங்களிலும் ஒன்றாகவே பிரகாசிக்கும், தெளிந்த நீரில் சூரியனின் பிம்பத்தை பார்க்கலாம். கல்,மண்ணில் இப் பிம்பத்தை காண இயலாது. இது சூரியனின் குற்றம் அல்ல. அதுபோல இறை இன்பத்தை பெற உயிரின் தகுதியே முதற்க்காரணம் ஆகும்.

இருபா இருபது- பகுதி 4

கேள்வி 14 : இருவினை எதனால் உயிர்க்கு வந்தது ?
பதில்: இருபாஇருபஃது 14 வது பாடல்
மனம்(நினைவு),காயம்(செயல்),வாக்கு(மொழி) ஆகிய மூன்று கருவிகளால் உயிர்க்கு வினை வந்தது.
கேள்வி: இம்மூன்றும் சடப்பொருள், அறிவற்றன, அப்படியிருக்க, அவற்றால் உயிர்க்கு வினையை ஊட்டுவது எங்ஙனம்?
விடை: அவை அறிவற்றவை ஆயினும்,உயிர் அதனை கூடுவதால் வரும் விளைவே இருவினை யாகும்.(நஞ்சு உவமை முன்பே கூறியுள்ளோம்)
கேள்வி: முன் செய்த வினையை துய்த்து வரும்போது ஏறும்வினை அல்லது வரும்வினை (புதிய வினை) வருவது ஏன்?
பதில்: முன்வினையை உயிர் துய்க்கும் போது ஏற்படும் விருப்பு,வெறுப்பே ஏறும்வினை வரக்காரணமாகிறது.

இருபா இருபது- பகுதி 3

கேள்வி 11 : உயிர் ,மும்மலத்தோடு சார்ந்தும்,இறையோடு சார்ந்தும் மாறிமாறி கூடுகிறதே இது எங்ஙனம் ?
விடை - இருபாஇருபது 11வது பாடல்
பாசி நிறைந்த குளத்தில் ஒரு கல் எரியும் போது பாசி விலகி சூரியன் தெரிந்து பின் மறைகிறது. அதுபோல ஞான சொல் என்ற கல் உயிரின் அறியாமையை விளக்கி இறையான்மையை உணரச் செய்கிறது. சத்சங்கத்தை நீங்கிய உடனே மும்மலத்தை உயிர் மீண்டும் சார்கிறது.
கேள்வி 12 : உயிர், இறைவனை கூடியநிலையில் இறைவன் தன் பேரின்பத்தை வழங்கியும், உயிர் இறைவனை நாடாது இருக்கும் போது அவ் இன்பத்தை இறைவன் வழங்காது இருப்பது எங்ஙனம் ?
பதில்: இருபாஇருபது 12 வது பாடல்
உயிர்க்கு வினைக்கழிவு செய்யும் வரை இறைவன் உயிர்க்கு உயிராய் இருந்து பக்குவப்படுத்த தோன்றாத்துணையாயும்,ஆணவம் நீக்கம் பெற்ற உயிர்க்கு முன்வந்தருளி பேரின்பத்தை வழங்குகிறார்.
கருத்து : சூரியன் எல்லா இடங்களிலும் ஒன்றாகவே பிரகாசிக்கும், தெளிந்த நீரில் சூரியனின் பிம்பத்தை பார்க்கலாம். கல்,மண்ணில் இப் பிம்பத்தை காண இயலாது. இது சூரியனின் குற்றம் அல்ல. அதுபோல இறை இன்பத்தை பெற உயிரின் தகுதியே முதற்க்காரணம் ஆகும்.

இருபா இருபது- பகுதி 2

கேள்வி 3- ஒருநேரம் அறிந்தும் ஒருநேரம் அறியாமலும் உள்ள நிலையில் உள்ளேன். எனவே அடியேனை அறிவுடைய பொருள் என்று கூறுவதா ?அறிவற்ற பொருள் என்று கூறுவதா ? விடையை ஆய்ந்து அறிவித்து அருள்க என்று தனது குருவான மெய்கண்டாரிடம் கேட்பது போல பாடியுள்ளார்.
விடை : இருபாஇருபது மூன்றாவது பாடல் .
உயிர் தானே அறியும் பொருள் அல்ல, உணர்த்த உணரும் தன்மை கொண்டது. தான் சார்ந்த பொருளின் திறத்தை பொருத்தே அதன் அறிவு விளங்கும்.உயிர் அறிவற்ற சடப்பொருள்அல்ல, அறிவித்தால் அறியும் இயல்புடையது.
கேள்வி 4 - மும்மலங்களும் உயிரோடு சேர்ந்தது எங்ஙனம்? எப்போது உயிரிடத்திலிருந்து நீங்கும்?
விடை : இருபாஇருபது நான்காவது பாடல் .
  • மும்மலத்தை உயிருக்கு இறைவன் ஊட்டவில்லை,உயிரும் மும்மலத்தை தேடி சேரவும் இல்லை, மும்மலமும் உயிரை சென்று பற்றிக்கொள்ளவும் இல்லை. எனவே உயிர் என்றாலே மும்மலத்தோடு கூடி இருத்தலேயாகும்.
  • உதாரணமாக செப்பு பாத்திரத்தில் பிடிக்கும் களிம்பு போலவும்,நெல் என்றாலே உமி சேர்ந்த அரிசி போல உயிர் மும்மலத்தொடு கூடி இருத்தல் இயல்பு. முக்தி நிலை பெற்றநிலையிலும் உயிரோடு மும்மலம் இருக்கும். ஆனால் உயிர் தன் தன்மை இழந்து சிவமாம் தன்மை பெருவதால் மும்மலம் முடங்கி கிடக்கும்.வறுத்த விதை போன்று கிடக்கும்.

இருபா இருபது- பகுதி 1

சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் இருபா இருபது என்ற நூல் தொகுப்பை பகிர்ந்து கொள்வோம். இந்நூலை அருளியவர் அருள்நந்திசிவம் ஆவார். 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த இப்பெருந்தகை மெய்கண்டாரின் சீடர்.இவரது இயற்பெயர் சதாசிவம், ஆகமங்களை கற்றுத் தெளிந்த பண்டிதர் என்பதால் அனைவரும் சகல ஆகம பண்டிதர் என்று அழைத்தனர். வடமொழியிலும் தமிழ்மொழியிலும் பெரும் புலமைப் பெற்று திகழ்ந்தார்.
இவர் அருளிய பிறிதொரு நூல் சிவஞான சித்தியார் ஆகும். இந்நூலில் ஆசிரியர் சைவசித்தாந்த உண்மைகளை விளக்கம் செய்ய தானே சீடனாக இருந்து கேள்வி கேட்டு அதற்கு தானே பதிலையும் கூறி விளக்கியுள்ளார்.
கேள்வி 1 : நம்மிடமிருந்து இறைவன் எப்போதும் விலகாமல் இருக்கும் நிலை உள்ளபோது ,அடியேனுக்கு அறியாமை எங்கிருந்து வந்தது?
விடை : இருபாஇருபது 2வது பாடல் .
  • இறைவன் உயிர்க்கு உயிராய் உடனாய் இருந்து பல பிறப்பினை தந்து அவ்உயிர் பக்குவநிலைக்கு ஏற்ப குருநாதராய் வந்து ஆட்க்கொள்வார். உயிர் பக்குவம் பெற்றுவரும் நிலையில் ,தன்னை தோற்றத்திற்கு கொண்டு வந்தவரும்,பக்குவபடுத்துபவரும் தன்னுள்ளே இருந்து அருளும் இறைவன் என்பதை அறியாத உயிர்கள் அறியாமையில் மூழ்கி கிடக்கிறது.
  • உயிர் எதனை சார்ந்துள்ளதோ அதனை தன் தன்மையாக நினைக்கும் தன்மை உடையது. மும்மலத்தை சார்ந்து அதனையே தானாக நினைத்து அறியாமையில் கிடக்கிறது. இந்நிலை மாற்றவே இறைவன் உடனாய் இருந்து பக்குவப்படுத்துகிறார்.குருநாதனாக வேறாய் வருகின்றார். எனவே இறைவன் உயிர்க்கு உடனாயயும்,வேறாயும் இருந்து அருள்வார்.

சிவஞான சித்தியார் - Part 14

சிவஞான சித்தியார் 323வது பாடல் ஈசனுக்கு அன்பு இல்லார் அடியவர்க்கு அன்பு இல்லாதவராக இருப்பர். அவர்களின் நட்பை நீக்கி,சிவனடியாரின் கூட்டத்தை...